கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்


கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 10 May 2021 10:47 PM IST (Updated: 10 May 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரூர், மே.11-
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழுஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
கரூர் நகரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்டவைகள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மளிகைகடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறந்து இருந்தது. பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வந்து மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.  டீக்கடைகள், ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன.
அபராதம்
இதன் காரணமாக காலையில் கோவைரோடு, ஜவஹர்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவிலேயே மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மனோகரா கார்னர், லைட்ஹவுஸ், திருமாநிலையூர், சர்ச்கார்னர் உள்ளிட்ட பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். அப்போது, அநாவசியமாக சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். கரூர் பஸ்நிலையம் வெறிச்சோடி கிடந்ததால் சிறுவர்கள் அங்கு சைக்கிள் ஓட்டி பழகினர்.
குளித்தலை
குளித்தலை பகுதியில் நேற்று மதியம் வரை  காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருந்தன. அந்த கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். பிற்பகலுக்கு பின்னர் பொதுமக்கள் நடமாட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. ஆங்காங்கே சிலர் மோட்டார் சைக்கிள்களில் சென்று வந்தனர்.
பஸ் நிலையம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்சென்ற வாகனங்களை ஆங்காங்கே காண முடிந்தது. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு இருந்த கடைகளை போலீசார் அறிவுரை வழங்கி மூட செய்தனர்.
குளித்தலை நகரப்பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார், ஊர்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரவக்குறிச்சி-நொய்யல்
அரவக்குறிச்சி பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறந்து இருந்தன. ஆனால் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், கரைப்பாளையம் தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மதியம் 12 மணி வரை மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், தேநீர் கடைகள், பூக்கடைகள், விவசாய உரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்திருந்தன. அதன்பின் மூடப்பட்டன. பிற கடைகள் திறக்கப்படவே இல்லை. நொய்யல் அரசு ஈ.வே.ரா. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியதை காணமுடிந்தது.
சரக்கு வாகனங்கள்
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கரூர் -ஈரோடு நெடுஞ்சாலை, கொடுமுடி- பரமத்தி வேலூர் நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்றதை காணமுடிந்தது. தவுட்டுப் பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் போலீசார் எந்தவாகனங்களையும் தடுக்கவில்லை. இதனால் வாகனங்கள் தடையின்றி சென்று வந்தன.
இதேபோல் கிருஷ்ணராயபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் முழுஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story