கரிமூட்டம் தொழிலாளியை கொலை செய்தவர் கைது


கரிமூட்டம் தொழிலாளியை கொலை செய்தவர் கைது
x
தினத்தந்தி 10 May 2021 5:25 PM GMT (Updated: 10 May 2021 5:25 PM GMT)

கரிமூட்டம் தொழிலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, 
கரிமூட்டம் தொழிலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கொலை
கமுதி அருகே கோவிலாங்குளம் போலீஸ் சரகம் அரிய மங்கலத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் கண்ணன் (வயது51). இவர் காட்டு கருவேல மரங்களை குத்தகைக்கு வாங்கி, வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் விறகு வெட்டும் இடத்திற்கு கண்ணனுக்கு மனைவி ஆறுமுகவேல் சாப்பாடு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது கணவரை காணாமல் தேடினார்.
அங்கு சற்று தூரத்தில் வெட்டுக்காயங்களுடன் கண்ணன் பிணமாக கிடந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து கோவிலாங்குளம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா ஆகியோர் போலீசாருடன் சென்று படுகாயத்துடன் கிடந்த கண்ணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
 கொலையாளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்  உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வபாண்டியன், தனிப்பிரிவு நவநீதகிருஷ்ணன், கண்ணன், ஏட்டு அழகு ராஜா ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படை கொலையாளிகளை தேடிவந்தனர். கொலையாளிகளை தனி போலீஸ் படையினர் புலன் விசாரணை நடத்தி தேடிவந்தனர்.
பாராட்டு
 இதில் அறியமங்கலத்தை சேர்ந்த நல்லு மகன் ராமு (45) என்பவரை பிடித்து தனிப்படை போலீஸ் படையினர் விசாரித்ததில் அவர் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. கரிமூட்டம் போடும் தொழிலில் ஏற்பட்ட போட்டி ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக  கண்ணன் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. கொலை சம்பவத்திற்கு பின்னர் தன்னை யாரும் சந்தேகப்படாத வகையில் ஊரிலேயே ராமு தங்கி நடமாடி வந்துள்ளார். கொலையாளிகளை பிடித்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் பாராட்டினர்.

Next Story