முழு ஊரடங்கு அமலானது: மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு அமலானதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின.
புதுக்கோட்டை:
முழு ஊரடங்கு
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில் நோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலானது.
புதுக்கோட்டையில் காய்கறி கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகள் பகல் 12 மணி வரை இயங்கின. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் ஓடவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன சோதனை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் மட்டும் வினியோகிக்கப்பட்டன. பகல் 12 மணி வரை பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றபடி இருந்தனர்.
போலீசார் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து கொரோனா பரிசோதனையை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
சாலைகள் வெறிச்சோடின
பகல் 12 மணி வரை முழு ஊரடங்கு போல நிலவரம் தெரியவில்லை. பொதுமக்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு மேல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், டீக்கடைகள் அடைக்கப்பட்டன. வங்கிகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் கூட்டம் சற்று இருந்தது. கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்பட கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாதுகாப்பு பணிகளை அய்வு மேற்கொண்டார். அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார். அதன்பின் உழவர் சந்தை, கீழ ராஜ வீதி உள்பட நகரப்பகுதியில் சுற்றி வந்து பார்வையிட்டார். அப்போது டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அத்தியாவசிய தேவையை தவிர மற்றபடி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என போலீசார், அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆவுடையார்கோவில், காரையூர்
ஆவுடையார்கோவிலில் மளிகை, காய்கறி, மருந்து, பால் கடைகள் திறந்திருந்தன. மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓட வில்லை. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. காரையூர் பகுதியான மேலத்தானியம், கீழத்தாணியம், ஒலியமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மளிகை கடை உள்ளிட்ட கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருமயம், கந்தர்வகோட்டை
திருமயம் பஸ் நிலையம் ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்துக்கள் எதுவுமில்லாமல் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் ஊராட்சியில் கொரோனா குறித்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பூக்களை சாலையில் கொட்டிய அவலம்
கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்பட அனைத்து கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கு காலங்களில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்லவும் தடையில்லை என்றாலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் கீரமங்கலம் பகுதியில் ஒவ்வொரு நாளும் 3 டன் வரை பூக்கள் குப்பைக்கு போகிறது. அதே போல நேற்று முதல் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமல் சாலைகளில் கொட்டியுள்ளனர். இதேநிலை நீடிக்கும் போது பூ விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பொன்னமராவதி
பொன்னமராவதி அண்ணா சாலை, காந்தி சிலை, பஸ் நிலையம், நாட்டுக்கல் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால், மளிகை கடைகள் மட்டும் திறக்கப்பட்டு அடைக்கப்பட்டன. பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கை முன்னிட்டு பொன்னமராவதி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
அன்னவாசல், அறந்தாங்கி, திருவரங்குளம், ஆதனக்கோட்டை
அன்னவாசல், அறந்தாங்கி, திருவரங்குளம், ஆதனக் கோட்டை பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அன்னவாசல் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தொளிக்கப்பட்டது. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேரன் உள்ளிட்ட அலுவலர்கள் இலுப்பூர், அன்னவாசல் பகுதி முழுவதும் ஆய்வில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story