கர்நாடகத்தில் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின


கர்நாடகத்தில் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 11 May 2021 12:03 AM IST (Updated: 11 May 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து கர்நாடகத்தில் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின. சாலைகளில் வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் தடியால் விரட்டியடித்தனர்.

பெங்களூரு:

சேவைகளுக்கு அனுமதி

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க 14 நாட்கள் புதிய கட்டுப்பாடுகளுடன்  கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. நேற்று முன்தினம் வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் சாலைகளில் வாகனங்களின் இயக்கம் வழக்கம் போலவே இருந்தது. இதனால் கர்நாடக அரசு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. 

ஆனால் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், வாகன போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனை காலை 6 மணி முதல் 10 மணி வரை அதாவது 4 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடவடிக்கை

நேற்று காலை 10 மணி வரை பொதுமக்கள் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பிற வாகனங்களில் வந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் பொதுமக்கள் நடந்தே வந்து பொருட்களை வாங்கி சென்றனர். காலை 10 மணிக்கு மேல் போலீசார் முழுமையாக களத்தில் இறங்கினர். 

பெங்களூருவில் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் தடுப்புகளை வைத்து பாதி அளவுக்கு தடுத்தனர். வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடியால் அடித்து விரட்டியடித்தனர். பலரின் வாகனங்களை பறிமுதல் செய்து அனுப்பினர். அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

முழு ஊரடங்கு நிலை

இதனால் நகரில் முக்கிய சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள் பஸ் போக்குவரத்து இன்றி அமைதியாக காட்சி அளித்தது. போலீசார் பிரதான சாலைகளில் ரோந்து வந்து கண்காணித்தனர். போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியதால், முழு ஊரடங்கு நிலை காணப்பட்டது.

பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, கலபுரகி, உப்பள்ளி, மங்களூரு போன்ற பெரிய நகரங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரத்தில் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. உற்பத்தித்துறையை சேர்ந்த நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன.

காற்றில் பறந்த சமூக இடைவெளி

அரசு-தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் தடையின்றி இயங்கின. ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கத்திற்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. அடுத்த 13 நாட்களும் இதே போல் கர்நாடகம் முடங்கி இருக்கும். இந்த 14 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை பாதிப்பு குறையாவிட்டால். இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள மத்திய மந்திரி சதானந்தகவுடா வீட்டின் முன்பு பா.ஜனதா தொண்டர்கள், கொரோனா தடுப்பு மருந்து வாங்க குவிந்தனர். இதனால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறந்தது. 
அதே போல் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, புலிகேசிநகரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அங்கும் சமூக இடைவெளி என்பது சரியான முறையில் பின்பற்றப்படவில்லை.

Next Story