கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 239 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 239 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 11 May 2021 12:05 AM IST (Updated: 11 May 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:
புதிதாக 239 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 187 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 82 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 1,204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒருவர் பலி
இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பில் புதுக்கோட்டையை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
திருமயத்தில் 10 பேருக்கு கொரோனா  
திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை, அகில் கரை, சந்தப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேலும் யார்க்கும் பரவாமல் இருக்க பாதுகாப்பு கருதி திருமயம் ஊராட்சி சார்பில், துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் அனைத்து பகுதிக்கும் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதித்த நபர்கள் யாரும் வெளியில் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரிமளத்தில் 12 பேருக்கு கொரோனா 
இதில் அரிமளம் ஒன்றியத்தில் பெருங்குடி கிராமத்தை சேர்ந்த 14 வயது ஆண், ஏம்பல் அருகே உள்ள வரிக்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயது ஆண், ஏம்பல் அருகேயுள்ள விசூர் கிராமத்தை சேர்ந்த 31 வயது ஆண், பாம்பாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், கல்லூர் கிராமத்தை சேர்ந்த 52 வயது ஆண், மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 62 வயது ஆண், துறையூர் கிராமத்தை சேர்ந்த 65 வயது ஆண், தெற்கு குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண், அரிமளம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், அரிமளம் மீனாட்சிபுரம் ரோடு பகுதியை சேர்ந்த 55 வயது பெண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 63 வயது ஆண், சிவபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஆகிய 12 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருங்களூரைச் சேர்ந்த 35 வயது பெண், மேட்டுப்பட்டியை சேர்ந்த 41 வயது பெண், 19 வயது வாலிபர் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆதனக்கோட்டையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 2 முதியவர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story