வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 May 2021 6:49 PM GMT (Updated: 10 May 2021 6:49 PM GMT)

நொய்யல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல், மே.11-
நொய்யல் பகுதியில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழை சாகுபடி
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த பகுதிகளில் பூவன், ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வாழைத்தார்கள் விளைச்சலுக்கு வந்தவுடன் கூலிஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி  வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெளிமாநிலங்களுக்கு...
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ. 400-க்கும், விற்பனையானது.
விலைவீழ்ச்சி
இந்த நிலையில் நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ. 250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.150-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ. 300-க்கும் விற்பனையானது. வாழைத்தார் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Next Story