கொரோனாவுக்கு பலியான முதியவர் உடல் நள்ளிரவில் தோண்டி எடுப்பு
நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பலியான முதியவர் உடல் மாற்றி கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட உடல் நள்ளிரவில் தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பலியான முதியவர் உடல் மாற்றி கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட உடல் நள்ளிரவில் தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உடல் மாற்றி கொடுக்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மறவன்குடியிருப்பை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல் திங்கள்சந்தை அருகே உள்ள வட்டம் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை தொடர்ந்து வட்டத்தை சேர்ந்த முதியவரின் உறவினர்கள் நேற்று முன்தினம் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களிடம் ஆஸ்பத்திரி பணியாளர்கள், மறவன் குடியிருப்பை சேர்ந்த முதியவரின் உடலை தவறுதலாக பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஒப்படைத்து விட்டனர். அவர்கள் ஊருக்கு சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகு மறவன் குடியிருப்பை சேர்ந்தவர்கள் உடலை வாங்க வந்த போது தான் உடல் மாற்றி கொடுத்த விவகாரம் தெரிய வந்தது.
உறவினர்கள் போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் உடலை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டு வாக்குவாதம் செய்ததோடு, பிணவறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஒப்படைப்பதாக நேசமணிநகர் போலீசார் விரைந்து வந்து உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து வட்டத்தை சேர்ந்த முதியவர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் வாங்கி கொண்டனர். அவர்களுடன் மறவன்குடியிருப்பு முதியவரின் உறவினர்களும் சென்றனர்.
உடல் தோண்டி எடுப்பு
பின்னர் நள்ளிரவில் மறவன் குடியிருப்பை சேர்ந்த முதியவரின் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அடக்கம் செய்த உடலை தோண்டி எடுக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரணியல் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், கல்குளம் தாசில்தார் ஜெகதா ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறவன்குடியிருப்பு முதியவரின் உடல் தோண்டி எடுத்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே இடத்தில் வட்டம் பகுதியை சேர்ந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மறவன்குடியிருப்பை சேர்ந்தவரின் உடலை, உறவினர்கள் வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். கொரோனாவுக்கு பலியானவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story