குமரியில் ஊரடங்கு அமலுக்கு வந்தது
குமரியில் 2 வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பஸ்கள், வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. பகல் 12 மணிக்கு மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கினர்.
நாகர்கோவில்,
குமரியில் 2 வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பஸ்கள், வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. பகல் 12 மணிக்கு மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எனினும் பாதிப்பு குறையாததால் நேற்று முதல் 2 வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
ஆனாலும் ஊரடங்கின்போது மளிகை மற்றும் காய்கறி கடைகள், டீக்கடைகள் இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. மருந்து கடைகள், பால் வினியோகம் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வெறிச்சோடின
குமரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கானது நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் பேக்கரி கடைகள், நகை கடைகள், துணி கடைகள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சாலை, கேப் ரோடு, ஆராட்டு ரோடு ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
அரசு பஸ்கள், வாடகை கார், ஆட்டோக்களை இயக்க அனுமதி இல்லை. வடசேரி, மணிமேடை பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றியும், வாகனங்கள் ஓடாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
அரசு அனுமதி அளித்தபடி வடசேரி காய்கறி சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட்டுகள் பகல் 12 மணி வரை செயல்பட்டன. இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அங்கு அரசு அலுவலர்கள் வந்து பணி புரிந்தனர்். அதே போல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வழக்கம் போல் செயல்பட்டாலும், சிகிச்சை பெற ஆட்கள் வராததால் புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருந்து வாங்கும் இடங்களும் வெறிச்சோடி கிடந்தன.
முன்கள பணியாளர்களுக்கு பஸ்கள் இயக்கம்
நாகர்கோவில் மாநகரில் சில ஓட்டல்கள் காலையில் 6 மணிக்கு திறக்கப்பட்டு, பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
வெளியூர்களில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கிய பொதுமக்கள் ஆட்டோக்கள் ஓடாததால் கடும் அவதிக்கு ஆளானார்கள். சிலர் நடந்தே தங்களது வீட்டுக்கு சென்றனர். மேலும் சிலர் உறவினர்களுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
அதே சமயம் அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது கீழமணக்குடி- நாகர்கோவில் (வழி- மேலகிருஷ்ணன்புதுார், என்.ஜி.ஓ.காலனி), மணக்குடி-நாகர்கோவில் (வழி- பறக்கை) கன்னியாகுமரி- நாகர்கோவில் (வழி- கொட்டாரம்), கன்னியாகுமரி- நாகர்கோவில் (வழி- அஞ்சுகிராமம்), குளச்சல்- நாகர்கோவில் (வழி-கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்சந்தை, குருந்தன்கோடு, ஆசாரிபள்ளம்), குளச்சல்- நாகர்கோவில் (மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், கோணம், செட்டிக்குளம்), களியக்காவிளை- நாகர்கோவில் (வழி- மார்த்தாண்டம், அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி), ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் (வழி- தோவாளை, வெள்ளமடம்), தடிக்காரன்கோணம்- நாகர்கோவில் (வழி- கேசவன்புதூர், திட்டுவிளை, பூதப்பாண்டி, இறச்சகுளம், குலசேகரம்- நாகர்கோவில் (வழி- திருவட்டார், ஆற்றூர், மேக்காமண்டபம், அழகியமண்டபம், தக்கலை) ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினார்கள். அவசியம் இல்லாமல் சுற்றி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எல்லை பகுதிகளான களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மேலும் முக்கியமான சந்திப்புகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story