சேலம் மாவட்டத்தில் 36 இடங்களில் தடுப்பு அமைத்து சோதனை 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டத்தில் 36 இடங்களில் தடுப்பு அமைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம்:
முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டத்தில் 36 இடங்களில் தடுப்பு அமைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
முழு ஊரடங்கு
கொரோனா வைரசின் 2-ம் அலை தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மளிகை கடை, காய்கறி, இறைச்சி மற்றும் மீன்கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்து இருக்கும் என்றும் மற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி சேலம் மாநகர் பகுதியில் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காய்கறிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் வரவேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர்.
தீவிர சோதனை
இதையொட்டி சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம் முன்புறம் மற்றும் 5 ரோடு, ஜங்ஷன், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்பட 16 இடங்களிலும், மாவட்டத்தில் 20 இடங்களிலும் இரும்பு கம்பி மூலம் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கட்டுப்பாடுகளை மீறியும், அத்தியாவசிய தேவையின்றியும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தேவையில்லாமல் வெளியில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினர். அதேசமயத்தில் அத்தியாவசிய தேவைக்காக சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர். மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story