மண் ஏற்றிச்சென்ற லாரிகளை, தி.மு.க.வினர் சிறைபிடிப்பு
மண் ஏற்றிச்சென்ற லாரிகளை, தி.மு.க.வினர் சிறைபிடித்தனர்.
தா.பழூர்:
தஞ்சாவூரில் இருந்து விக்ரவாண்டி வரை நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏரிகள் தூர்வாரப்பட்ட மண் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மண் ஏற்றுவதற்கு கிராமங்களுக்கு வருவதும், மண் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் பகுதிக்கு செல்வதுமாக இருந்தன.
அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியினர் சிலர் மண் ஏற்றி வந்த லாரிகளையும், ஏற்ற சென்ற லாரிகளையும் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். லாரி டிரைவர்களிடம், மண் ஏற்றி வருவதற்கான உரிமம் உள்ளதா? என்று கேட்டனர். இதையடுத்து லாரி டிரைவர்கள் கொடுத்த ஆவணங்களில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட அதிகாரிகள் கையொப்பமிட்ட உரிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், தி.மு.க.வினரிடம் திடீரென போராட்டங்களில் ஈடுபடுவது தவறு என்றும், போராட்டம் நடத்த வேண்டுமென்றால் முன் கூட்டியே போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். அப்போது தி.மு.க.வினர், அப்பகுதியில் ஏராளமான லாரிகளில் மண் எடுத்து செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், ஆவணங்கள் இருப்பது குறித்து டிரைவர்கள் தெரிவிக்காததால், லாரிகளை தடுத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த லாரிகளை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 லாரிகள் 1 மணி நேரம் காரைக்குறிச்சி கிராமத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story