பக்தர்கள், சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய பிரகதீஸ்வரர் கோவில்
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மீன்சுருட்டி:
வரலாற்று சிறப்புமிக்க கோவில்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரா் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் ராஜேந்திர சோழனால், கங்கை நதி வரை போா் நடத்தி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுா்ணமி நாளில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த கோவிலில் நவக்கிரக பீடம், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். இதில் நடுவில் சூரிய எந்திரன் பதும பீடத்தில் நிலைபெற்றிருக்கிறது. மற்ற 8 கிரகங்களும் வேறுவேறு திசைகளை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு முகமாக சனிபகவான் 2 சக்கரங்கள் கொண்ட 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் மேற்கு முகமாக செலுத்துவது போன்று காட்சியளிக்கிறார்.
கொரோனா ஊரடங்கால்...
கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டு பயணிகளின் வருகை தடைபட்டது.
இருப்பினும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், வெளிமாநில சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதில் கோவில்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
வெறிச்சோடியது
அதன்படி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பிரகதீஸ்வரர் கோவிலிலும் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை மற்றும் மறு உத்தரவு வரும்வரை கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்றும், மத்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கம்போல் சாமிக்கு நடைபெறும் ஆறுகால பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அப்பகுதி பக்தர்கள் மற்றும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து, வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள பிரசாதத்தை எடுத்துச்செல்வார்கள். இந்நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story