ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 May 2021 2:20 AM IST (Updated: 11 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரிசி கார்டு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. முதல் -அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இந்த மாத இறுதிக்குள் முதற்கட்ட தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். இதற்கிடையில் நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், உதவிடும் வகையில் உடனடியாக நேற்று முதல் கொரோனா முதற்கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகளில் உள்ள மொத்தம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 910 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம், ரேஷன் கார்டுதாரர்களின் வீடுதோறும் சென்று கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகிக்கும் பணியினை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story