முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
மாவட்டத்தில் அரசு அறிவித்த முழுஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
விருதுநகர்,
மாவட்டத்தில் அரசு அறிவித்த முழுஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
முழு ஊரடங்கு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நேற்று முதல் முழுஊரடங்கை அறிவித்தது. இந்நிலையில் நேற்று பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் பிரதான சாலைகள் வெறிச்சோடின.
பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தன. ஆனாலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில் பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருள் வாங்குவதற்காக கடை வீதிகளில் அதிகமாக செல்லும் நிலையை காணமுடிந்தது. அதிலும் குறிப்பாக காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.
தடுப்பு நடவடிக்ைக
நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை காணப்பட்டது. ஆனாலும் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்டோ, டாக்சி, வேன் ஆகியவை இயங்கவில்ைல.
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் மட்டும் இயக்கப்பட்டன. பெட்ரோல் பங்க், மருந்து கடைகள் செயல்பட்டன. அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய துறைகளான வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசியத்துறையில் மட்டும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. மற்ற துறைகள் செயல்படவில்லை.
அலுவலருக்கு கொரோனா
விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அலுவலகம் நேற்று செயல்படவில்லை.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அலுவலகம் இயங்காது என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். பஸ்நிைலய தபால் அலுவலகம் ஊரடங்கு முடியும் வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டது. வங்கிகள் குறைந்த பட்ச ஊழியர்களுடன் மதியம் 2 மணி வரை செயல்பட்டது. இதுபோன்று மத்திய அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கின.
தொழிற்சாலைகள்
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பல தொழிற்சாலைகள் செயல்படாத நிலை இருந்தது.
பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி இல்லாத நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. விருதுநகர் மார்க்கெட்டில் நோய் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக காய்கறி விற்பனையாளருக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து போலீசார் நகரின் பல பகுதிகளில் விதி மீறலில் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலை இருந்தது. தமிழக அரசு பத்திரிகை வினியோகத்திற்கு தடையில்லை என தெளிவாக அறிவித்த போதிலும் விதிமுறைகளுக்கு முரணாக விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் கிழக்கு போலீசார் பத்திரிகை வினியோகத்திற்கு அனுமதி மறுத்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை பற்றி தெளிவான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் மதியம் 12 மணிக்கு மேல் தான் முழு ஊரடங்கு என்ற நிலை காணப்பட்டது.
வத்திராயிருப்பு, சாத்தூர், ஆலங்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, தளவாய்புரம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஊரடங்கை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story