நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாளில் ரூ.29½ கோடிக்கு மது விற்பனை


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 நாளில் ரூ.29½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 May 2021 9:51 PM GMT (Updated: 10 May 2021 9:51 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் ரூ.29½ கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதில் மதுப்பிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த 8, 9-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து மது விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் கடைகள் 2 வாரங்களுக்கு மூடப்படுவதை அறிந்த மதுப்பிரியர்கள் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில் பாதுகாத்து வைத்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. 
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மட்டும் ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 98 கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளும் என மொத்தம் 167 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 7-ந்தேதி ரூ.3½ கோடிக்கும், 8-ந்தேதி ரூ.10 கோடிக்கும், 9-ந்தேதி ரூ.16 கோடிக்கும் என மொத்தம் ரூ.29 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

Next Story