திருப்பூரில் வழக்கம் போல் இயங்கிய பனியன் நிறுவனங்கள்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக திருப்பூரில் வழக்கம் போல் பனியன் நிறுவனங்கள் நேற்று இயங்கின.
திருப்பூர்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக திருப்பூரில் வழக்கம் போல் பனியன் நிறுவனங்கள் நேற்று இயங்கின.
பனியன் நிறுவனங்கள்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோதே அதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆனால் முக கவசம், கொரோனா கவச உடையின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு கவச ஆடைகள் தயாரித்து வழங்க திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தது. எனவே பின்னலாடை துறையை அத்தியாவசிய துறையாக அறிவிக்க வேண்டும் என தொழில்துறையினர் தமிழக அரசை வலியுறுத்தினர். இதையடுத்து பின்னலாடை துறையை அத்தியாவசிய துறையாக தமிழக அரசு அறிவித்தது. இதன் காரணமாக அரசு வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வந்தன.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பின்காரணமாக தமிழக அரசு நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனவே முழு ஊரடங்கின்போது பனியன் நிறுவனங்கள் இயங்கலாமா? அல்லது இயங்க கூடாதா? என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்கலாம் என சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
வழக்கம்போல் இயங்கின
இந்த சிறப்பு அனுமதி குறித்த அறிவிப்பை திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்கு அனுப்பி நிறுவனங்களை இயங்குமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை திருப்பூரில் பனியன் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. முன்னதாக தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு வரும் முன்பு நுழைவு வாயில் பகுதியில் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அனைவரும் முககவசம் அணிந்தபடியும் பணியாற்றினர். ஆனால் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை.
வெறிச்சோடிய காதர்பேட்டை
இதுபோல் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது திருப்பூரில் காதர்பேட்டையாகும். இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடைவிற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள்.
மேலும், ஆர்டர்களும் கொடுத்து செல்வார்கள். அதன்படி அவர்களுக்கு ஆடைகள் அனுப்பிவைக்கப்படும். இதனால் காதர்பேட்டை எப்போதும் வியாபாரிகள் நடமாட்டத்துடன் உற்சாகமாக இருக்கும். ஆனால் முழு ஊரடங்கின் காரணமாக நேற்று காதர்பேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. காதர்பேட்டையில் உள்ள வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story