ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக திருச்சியில் குவிந்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், பாய், தலையணையுடன் விடிய, விடிய காத்திருப்பு


ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக திருச்சியில் குவிந்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், பாய், தலையணையுடன் விடிய, விடிய காத்திருப்பு
x
தினத்தந்தி 10 May 2021 10:36 PM GMT (Updated: 10 May 2021 10:36 PM GMT)

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பாய், தலையணையுடன் விடிய, விடிய முதல் காத்திருந்தனர்.


திருச்சி,
திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பாய், தலையணையுடன் விடிய, விடிய முதல் காத்திருந்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இந்த மருந்து விற்பனை தொடங்கியது. கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் அல்லது உடனிருந்து கவனிப்பவர்கள் கொண்டுவரும் டாக்டரின் பரிந்துரை சீட்டு உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சுமார் 50 பேருக்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்பட்டது. 

விடிய, விடிய காத்திருப்பு

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த மருந்து வாங்குவதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்து வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அன்று அரசு விடுமுறை நாள் என்பதால் வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் நேற்று ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மீண்டும் ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். திருச்சி தவிர புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்தனர். இவர்களில் சிலர் நேற்று முன்தினம் இரவே அந்த கல்லூரி வளாகத்தில் வந்து இடம் பிடித்து, விடிய, விடிய காத்திருந்தனர். 

பாய், தலையணையுடன்...

சிலர் பாய், தலையணை கொண்டு வந்து இரவில் அங்கேயே படுத்து தூங்கி காலையில் வரிசைக்கு வந்து நின்றனர். இதனால் நேற்று காலை அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

காலை 10 மணிக்கு மருந்து விற்பனை தொடங்கியது. சுமார் 100 பேருக்கு நேற்று மருந்துகள் வழங்கப்பட்டதாக மருத்துவ துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story