கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 May 2021 4:06 AM IST (Updated: 11 May 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

முதல் தவணை ரூ.2 ஆயிரம்

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை தடுக்கும் விதமாக, வருகிற 15-ந்தேதி முதல் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

8 லட்சத்து 6 ஆயிரம் அட்டைதாரர்கள் பயன்

திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 198 அரிசி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. தாலுகா வாரியாக நிவாரணத்தொகை பெறும் அரிசி கார்டுதாரர்கள் விவரம் வருமாறு:-
லால்குடி-83,027, மண்ணச்சநல்லூர்-60,483, மணப்பாறை-69,946, மருங்காபுரி-37,130, முசிறி-70,741, ஸ்ரீரங்கம்-94,620, திருச்சி கிழக்கு-1,11,095, திருச்சி மேற்கு-84,758, திருவெறும்பூர்-65,333, துறையூர்-85,546, தொட்டியம்-43,519

வீடு, வீடாக டோக்கன்

முதல் நிவாரண தொகை பெறுவதற்காக, அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் நேற்று முதல் நாள் ஒன்றுக்கு 200 ரேஷன்கார்டுதாரர்கள் வீதம் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி தொடங்கியது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பின்னரே, விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கும் பணியை தொடர்ந்தனர்.

வருகிற 13-ந்தேதிவரை டோக்கன் வழங்கும் பணி நடக்கிறது. 15-ந்தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் 200 பேருக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

புகார் எண் அறிமுகம்

அந்தந்த ரேஷன் கடைகளில் சமூக விலகலை கடைப்பிடித்து காலை 8 மணி முதல் பகல் 12 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.  உதவித்தொகை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் நின்று எவ்வித சிரமும் இல்லாமல் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் தவறாமல் முககவசம் அணிய வேண்டும். கடைகளில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும். இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி தாசில்தார்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 0431 -2411474, 94450 45618 ஆகியவற்றில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Next Story