திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல; கலெக்டர் திவ்யதர்ஷினி பேட்டி
திருச்சி மரக்கடையில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல. அரசு அதிகாரிகளின் கவனக்குறைவு தான் காரணம் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மரக்கடையில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல. அரசு அதிகாரிகளின் கவனக்குறைவு தான் காரணம் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். சிலை கை உடைப்பு
திருச்சி மரக்கடை பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையில் வலது மணிக்கட்டு பகுதியை நேற்று முன்தினம் விஷமிகள் சிலர் உடைத்து விட்டதாக கூறி அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. மேலும் போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷமிகள் அல்ல
திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கை மணிக்கட்டு பகுதி உடைந்தது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசாரால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. அப்போது சிலையின் கை மணிக்கட்டு பகுதியை உடைத்தது விஷமிகளா? அல்லது வேறு யாரும் காரணமா? என்று காணும் முயற்சியில் ஈடுபட்டபோது, அது விஷமிகளால் அல்ல என்பது உறுதியானது.
அதிகாரிகள் கவனக்குறைவு
அதாவது, தேர்தலின்போது திருச்சி மாநகரில் உள்ள தலைவர்களின் சிலைகள் துணி மற்றும் சாக்குப்பைகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டதையொட்டி, அங்கு இருந்த எம்.ஜி.ஆர். சிலையை சுற்றி மூடப்பட்டிருந்த திரையை அரசு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் பணியாளர்கள் அகற்றினர். அப்போது எதிர்பாராத விதமாக சிலையின் கை உடைந்துள்ளது.
அது 25 ஆண்டுகள் பழமையான சிலை ஆகும். சிலை உடைப்புக்கு அரசு அதிகாரிகளின் கவனக்குறைவு தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. திட்டமிட்டு யாரும் சிலையை அவமரியாதை செய்யவில்லை. எனவே, அரசே அதனை உடனடியாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
அனைத்து சிலைகளுக்கும் கூண்டு
திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளை சுற்றி கூண்டு அமைக்க பொதுப்பணித்துறையினரால் டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடின்றி அனைத்து தலைவர்களின் சிலைகளையும் சுற்றி கூண்டு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீரமைக்கப்பட்டது
இதற்கிடையே நேற்று பிற்பகலில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் உடைந்த கை சீரமைக்கப்பட்டது.
Related Tags :
Next Story