பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின


பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 11 May 2021 6:40 AM IST (Updated: 11 May 2021 6:42 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.  

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மருந்தகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. சலூன் கடைகள், துணிக்கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்தது.

ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு, ஏ.டி.சி., ராஜீவ்காந்தி ரவுண்டானா, காபிஹவுஸ் ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் நடமாட்டம் குறைந்தது

வாகனங்களில் வந்தவர்களிடம் அத்தியாவசிய மற்றும் அவசிய தேவைக்கு மட்டும் செல்கிறீர்களா? என்று கேட்டனர். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றிய நபர்களை எச்சரித்து அனுப்பினர். காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கையில் துணிப்பையுடன் நடந்து வந்தனர். 

எனினும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஊட்டியில் மக்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகன போக்குவரத்து குறைந்து இருந்தது.  அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளிலும் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடியது. ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள், மினி பஸ்கள் ஓடவில்லை. பூச்சிக்கொல்லி, உரம், விதை, மாட்டு தீவனங்கள் விற்பனை செய்யும் கடைகள், நடைபாதை கடைகள், பூ கடைகள் திறந்து இருந்தன.

வெறிச்சோடிய சாலைகள்

மதியம் 12 மணிக்கு பிறகு காய்கறி, மளிகை கடைகள் அடைக்கப்பட்டன. மருந்தகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து இயங்கின. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தது. முழு ஊரடங்கையொட்டி நீலகிரி முழுவதும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோத்தகிரியில் மதியம் 12 மணிக்கு பிறகும் வாகன போக்குவரத்து இருந்தது. அத்தியாவசிய பணியின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் அத்தியாவசிய பணிக்கான போக்குவரத்துக்கு அனுமதி பெற தாசில்தார் அலுவலகத்தில் அதிகமானோர் காத்திருந்தனர். அதில் கோத்தகிரியில் கடைகளை நடத்தி வரும் மேட்டுப்பாளையம் செல்லும் வியாபாரிகள் தங்களை சொந்த வாகனத்தில் தினமும் வந்து செல்ல அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

கூடலூர்

மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளை காந்தி மைதானத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. எனினும் மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகள் செயல்பட்டன. இதை அறிந்த சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று கடைகளை மூடிவிட்டு காந்தி மைதானத்துக்கு மாற்றும்படி உத்தரவிட்டனர்.

கூடலூரில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டது. மேலும் பால், மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்கின. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. மேலும் வாகன போக்குவரத்து அதிகமானது.

மதியம் 12 மணிக்கு பிறகு காய்கறி, மளிகை கடைகள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் நகரம், தேவர்சோலை, பந்தலூர், தேவாலா, நாடுகாணி, மசினகுடி, நடுவட்டம், எருமாடு, கொளப்பள்ளி, சேரம்பாடி உள்பட அனைத்து இடங்களும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.

கூடலூர் நகராட்சி பகுதியில் கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் தீவிர ரோந்து சென்றனர்.


Next Story