2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை


2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை
x
தினத்தந்தி 11 May 2021 6:45 AM IST (Updated: 11 May 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது.

நிவாரண தொகை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை குறைக்கும் வகையிலும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் இந்த மாதத்தில் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2,000 நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 85 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்படுகிறது.

டோக்கன் வினியோகம்

இதையடுத்து நேற்று முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் நிவாரண தொகை வழங்க சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். 

அதில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை எண், இடம், அட்டைதாரர் பெயர், நிவாரண தொகை பெற வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு நாளில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 200 டோக்கன்கள் வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளி

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ரேஷன் கடைகளில் நிவாரண தொகை பெறும் ஆர்வத்தில் அதிகம் பேர் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். 

வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நிவாரண தொகை பெற வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.


Next Story