திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது


திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 11 May 2021 6:53 AM IST (Updated: 11 May 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக நேற்று திருவண்ணாமலை நகரம் மற்றும் சாலைகள் வெறிச்சசோடியது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கில் அரசு அறிவித்த படி நேற்று பகல் 12 மணி வரை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், வேளாண் சார்ந்த கடைகள் உள்ளிட்டவை மட்டுமே திறந்து இருந்தன. இருப்பினும் திருவண்ணாமலை நகர பகுதியில் மதியம் 2 மணி வரை மக்கள் நடமாட்டம் பரவலாக காணப்பட்டது. பின்னர் படிபடியாக மக்கள் நடமாட்டம் குறைந்தது. 

திருப்பி அனுப்பினர்

திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் நேற்று முதல் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது. அங்கு  வியாபாரத்திற்கு வந்த வியாபாரிகளுக்கு நகராட்சி பணியாளர்கள் மூலம் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. இருப்பினும் திருவண்ணாமலை கடலைக்கடை மூலை சந்திப்பு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் நேற்று பகலில் வழக்கம் போல் இயங்கியது. இதில் ஏராளமானோர் காய்கறிகளை வாங்கி சென்றனர். தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்று போலீசார் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள் இயங்க தடை செய்யப்பட்டதால் அத்தியாவசிய தேவையின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர். நகரின் முக்கிய பகுதிகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
வெறிச்சோடியது

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். பகல் 12 மணிக்கு மேல் போலீசார் அனைத்து கடைகளையும் மூட எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அனைத்து கடைகளுடம் மூடப்பட்டது. சில பகுதிகளில் ஓட்டல்கள் மட்டும் திறந்து இருந்தன. அங்கு பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கினால் மதியத்திற்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story