அரக்கோணத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு


அரக்கோணத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
x

அரக்கோணத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு சென்றிருந்த தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

அரக்கோணம்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பாப்பான் குளம், உமா நகர் பகுதியில் வசித்து வருபவர் பெட்ரிக் ஞானதுரை. காஞ்சீபுரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேனா பெட்ரிக். இவர் அரக்கோணத்தில் நிதியுதவி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

ஹேனா பெட்ரிக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பெட்ரிக் ஞானதுரையும் சென்னைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு திரும்பினர்.

14 பவுன் நகை திருட்டு

வீட்டில் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெட்ரிக் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மர்நபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டுக்குள் நுழைந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் தங்க நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் வேறு ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகைகள் மர்ம நபர்கள் கண்ணில் படாமல் தப்பியது. 

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story