ஜோலார்பேட்டை அருகே ரேஷன்கடை விற்பனையாளர் திடீர் சாவு
ஜோலார்பேட்டை அருகே ரேஷன் கடையில் அரிசி வழங்கிக்கொண்டிருந்த விற்பனையாளர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
ஜோலார்பேட்டை
அரிசி வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 60). ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மண்டலவாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளர் பற்றாக்குறை காரணமாக வாசுதேவன் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல வாசுதேவன் மண்டல வாடி ரேஷன் கடையில் பொது மக்களுக்கு அரிசி வினியோகம் செய்து கொண்டிருந்தார்.
மயங்கிவிழுந்து சாவு
அப்போது வாசுதேவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அருகாமையில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று அமர வைத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
இவருக்கு அனுராதா என்ற மனைவியும், நிரஞ்சன் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்து கொண்டிருந்தபோது விற்பனையாளர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story