2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
மரக்காணம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தார்.
விழுப்புரம்,
மரக்காணம் தாலுகா காளியாங்குப்பத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 34), லாரி டிரைவர். இவருக்கும், அனுமந்தை கிராமத்தை சேர்ந்த கலைவாணி (29) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்திகா (5), அனுஸ்ரீ (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
புருஷோத்தமனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று புருஷோத்தமன் மது குடித்துவிட்டு வந்ததால் மீண்டும் அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
பெண் தீக்குளித்து தற்கொலை
இதில் மனமுடைந்த கலைவாணி தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த கலைவாணியை புருஷோத்தமன் காப்பாற்ற முயன்றபோது அவரும் பலத்த காயமடைந்தார். உடனே அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி இரவு கலைவாணி இறந்தார். அவரது கணவர் புருஷோத்தமனின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
கணவரும் உயிரிழந்தார்
இதனால் அவரை அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் நேற்று அதிகாலை இறந்து விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கணவன்- மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story