ஆண்டிப்பட்டி அருகே கொரோனாவுக்கு மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை சாவு


ஆண்டிப்பட்டி அருகே கொரோனாவுக்கு மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை சாவு
x
தினத்தந்தி 11 May 2021 9:02 PM IST (Updated: 11 May 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். அதிர்ச்சியில் அவரது தந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். அதிர்ச்சியில் அவரது தந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 
கொரோனாவுக்கு வாலிபர் பலி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 72 வயது முதியவருக்கு 2 மகன்கள் இருந்தனர். அவரது மூத்த மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இளைய மகனான 35 வயது வாலிபர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல், தொடர் இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்தார். 
இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 
தந்தை சாவு
வாலிபர் இறந்தது குறித்து, வீட்டில் இருந்த அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அதிர்ச்சியில் அவரும் திடீரென்று இறந்துபோனார். 
இதற்கிடையே அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் அவரது மனைவி தவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த சில தன்னார்வலர்கள் இறந்த முதியவரின் உடலை எடுத்து சென்று, ஆண்டிப்பட்டி மயானத்தில் உரிய சடங்குகளுடன் எரியூட்டினர். 
கொரோனாவுக்கு மகன் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் தந்தையும் இறந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story