மடிக்கணினிகள் திருடிய 4 பேர் கைது


மடிக்கணினிகள் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2021 9:08 PM IST (Updated: 11 May 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்

தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

மடிக்கணினிகள் திருட்டு 

கூடலூர் தாலுகா தேவாலாவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், இந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இந்த பள்ளிக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பள்ளி மாணவர் களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த 12 மடிக்கணினிகளை திருடிச்சென்றனர். 

போலீசார் விசாரணை 

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார், பள்ளிக்கு வந்து பார்வையிட்டதுடன், இது குறித்து தேவாலா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் இது குறித்து தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு அமீர் அகமது மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 
வாலிபர் சிக்கினார் 

அத்துடன் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். தேவாலா அருகே உள்ள வாழவயல் பகுதியை சேர்ந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து வாழவயல் பகுதியை சேர்ந்த நரேந்திரபாபுவை (வயது 20) போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அதில் அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தேவாலா அரசு பள்ளிக்குள் புகுந்து மடிக்கணினிகளை திருடியது தெரியவந்தது. 

அத்துடன் அந்த மடிக்கணினிகளை தனது வீட்டின் பின்னால் மறைத்து வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

4 பேர் கைது 

இதை தொடர்ந்து போலீசார் அந்த 12 மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். அதுபோன்று நரேந்திரபாபு, அவருடைய நண்பர்கள் செல்வம் (19), பாண்டியாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (20), அட்டி பகுதியை சேர்ந்த ராஜ்நாத் (21) ஆகியோரை கைது செய்தனர். 

சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள் மடிக்கணினிகளை மீட்டு, 4 பேரை கைது செய்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். 


Next Story