கொரோனாவுக்கு மேலும் 2 பேர் சாவு


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 May 2021 10:19 PM IST (Updated: 11 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். 422 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22,826 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 144 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 20,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரகண்டநல்லூரை சேர்ந்த 61 வயது முதியவரும், திண்டிவனத்தை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

422 பேருக்கு நோய் தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் 422 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,248 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,585 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,517 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் 427 பேருக்கு தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 14 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலன் இன்றி 118 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 680 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 427 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 110-ல் இருந்து 14 ஆயிரத்து 537-ஆக உயர்ந்துள்ளது.

Next Story