தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 313 ஆக அதிகரிப்பு


தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 313 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 10:35 PM IST (Updated: 11 May 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்தது. நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்தது. நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதியானது நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படுகிறது. அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேறவும், வெளியில் இருந்து மக்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்படும்.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என 313 இடங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அப்பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே சின்னமனூர் நகராட்சி, உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டி, விசுவாசபுரம் ஆகிய இடங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லாமலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழையாமலும் முழுமையாக தடுப்புகள் வைத்து அடைக்க வேண்டும் என்றும், அரசின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேல், சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் சியாமளா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story