கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
கடலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, போடப்பட்டு வருகிறது.
முதலில் முன் களப்பணியாளர்களும், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தற்போது வரை 1½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி விட்டனர். மற்றவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட குவிந்து வருகின்றனர்.
கோவாக்சின் தட்டுப்பாடு
ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவாக்சின் தடுப்பூசி போட கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவாக்சின் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளது.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 510 குப்பிகள் கோவாக்சின் இருப்பு இருந்தது. கோவிஷீல்டு 9,730 குப்பிகள் இருந்தது.
அவை நேற்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதால் கோவாக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 1 லட்சம் தடுப்பூசிகள் கேட்டு இருக்கிறோம். வந்தவுடன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story