அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்


அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்
x
தினத்தந்தி 11 May 2021 10:54 PM IST (Updated: 11 May 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அவர்கள் பயணம் செய்தனர்.

கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் அலுவலகம் சென்று வர சிரமம் ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் கடலூர்- புதுச்சேரி, கடலூர்- சிதம்பரம், கடலூர்- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடலூர்- பண்ருட்டி, கடலூர்- விருத்தாசலம், வடலூர்-காட்டுமன்னார்கோவில், வடலூர்- பண்ருட்டி, திட்டக்குடி- விருத்தாசலம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அடையாள அட்டை

இது தவிர விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை, கடலூர்- விழுப்புரம், கடலூர்- சென்னை, வடலூர்- விழுப்புரம், நெய்வேலி- சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காட்டுமன்னார்கோவில்- சிதம்பரம் ஆகிய வழித்தடங்களில் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இவற்றில் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு சென்ற ஊழியர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இருக்கையில் அமர்ந்து சென்றனர்.

 முன்னதாக அவர்கள் அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்த பிறகே பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர். 
தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப நிலை அறியப்பட்டது. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பஸ்களில் பயணம் செய்தனர்.


Next Story