ஊரடங்கால் விற்பனையாகாமல் வீணாகி வரும் வாழைத்தார்கள்


ஊரடங்கால் விற்பனையாகாமல் வீணாகி வரும் வாழைத்தார்கள்
x
தினத்தந்தி 11 May 2021 11:56 PM IST (Updated: 11 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதிகளில் ஊரடங்கால் வாழைத் தார்கள் விற்பனையாகாமல் வீணாகி வருகிறது.

வடகாடு, மே.12-
வடகாடு, மாங்காடு பகுதிகளில் ஊரடங்கால் வாழைத் தார்கள் விற்பனையாகாமல் வீணாகி வருகிறது.
வாழை சாகுபடி
வடகாடு, மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள். இந்தநிலையில் கொரோனா ஊரடங்களால் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாழைத்தார்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக வாழைத்தார்கள் வெட்டப்படாமல் வாழையிலேயே பழுத்து வீணாகி வருகிறது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா முழுஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எனினும் கடன் வாங்கி மீண்டும் வாழை விவசாயம் செய்தோம். தற்போது, மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
பலாப்பழம் விற்பனை மந்தம்
வடகாடு பகுதியில் நேற்று பலாப்பழ விற்பனை மந்தமாகவே நடந்தது. ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான பலாப்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. அதுவும் விற்பனையாகாமல் தேங்கி இருந்தன.
இதேபோல் வடகாட்டில் ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனவே தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Next Story