மரத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
ராய்ச்சூர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் பேசாததால் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
ராய்ச்சூர்:
உளவுப்பிரிவு போலீஸ்காரர்
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் அருகே கெசரட்டா கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா ராத்தோடு (வயது 28). இவர், பெங்களூருவில் உளவுப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னப்பாவுக்கும், அந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.
அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையில், விடுமுறையில் சென்னப்பா பெங்களூருவில் இருந்து லிங்கசுகுருக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. சென்னப்பாவை, அவரது தாய், அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் நின்ற மரத்தில் சென்னப்பா தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து கிராம மக்கள் அதிா்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் லிங்கசுகுர் போலீசார் விரைந்து வந்து சென்னப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சென்னப்பாவுடன் திருமணம் நிச்சயமான பெண் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார்.
ஆனால் கடந்த 3 நாட்களாக சென்னப்பாவுடன் அந்த பெண் பேசவில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சென்னப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story