கர்நாடகத்தில் சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் அமல் இல்லை


கர்நாடகத்தில் சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் அமல் இல்லை
x

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

கட்டுப்பாடுகளை மீறக்கூடாது

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள கட்டளை மையத்தில் நேரில் வந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் சிறிது கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை.

அனைத்து உதவிகள்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காலை 10 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

இன்று (நேற்று) மத்திய அரசின் உத்தரவால் 120 டன் திரவ ஆக்சிஜன் வந்துள்ளது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளில் சுமார் 500 நோயாளிகள் நீண்ட நாட்களாக சிகிச்சையில் உள்ளனர். 

அதனால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத நிலை உள்ளது. ஆஸ்பத்திரிகளில் ஓரளவுக்கு குணம் அடைந்ததும் மற்ற நோயாளிகளுக்கு படுக்கையை விட்டுக்கொடுக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் என்னை நேரில் சந்தித்து பேசினார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் இருந்து என்னென்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டார். அதுகுறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். 

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. அதுபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. தடுப்பூசி வந்ததும், முழுமையான அளவில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும். அதுவரை உரிய அழைப்பு இல்லாதவர்கள் தடுப்பூசி மையங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story