மெலட்டூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை ரூ.90 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகைகள் ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மெலட்டூர்:-
தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகைகள் - ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராணுவ வீரர்கள்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள கொத்தங்குடி ஊராட்சி குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரன். இவருடைய மகன்கள் கபாலீஸ்வரன் (வயது35), பிரகதீஸ்வரன் (32).
சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது விடுமுறை காரணமாக இருவரும் சொந்த ஊரான குண்டூருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் ஒரு வாரமாக மின்சாரம் இல்லை. இதனால் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள தங்களுடைய பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றனர்.
பூட்டை உடைத்து கொள்ளை
நேற்று காலை கபாலீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு கபோர்டில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரத்தை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக மெலட்டூர் போலீஸ் நிலையத்துக்கு கபாலீஸ்வரன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்து, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் மூலமாகவும் துப்பு துலக்கப்பட்டது. கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story