திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க ஊரக- குற்றப்பிரிவு போலீஸ் நிலையம்


திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க ஊரக- குற்றப்பிரிவு போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 12 May 2021 1:42 AM IST (Updated: 12 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க ஊரக- குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர்:

வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம்
பெரம்பலூர் நகரில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பட்டப்பகலில் பெண்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியவில்லை. வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகமாக உள்ளது. வீடு புகுந்து திருடிச்செல்லும் சம்பவங்கள், வழிப்பறிகள், கொள்ளை சம்பவங்களால் மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை பெரம்பலூரில் நிலவுகிறது.
பெரம்பலூரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வாலிபர்கள், உள்ளூர் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களில் பகலில் தெருத்தெருவாக சென்று நோட்டமிடுகின்றனர். வீட்டில் குடியிருப்பவர்கள் இல்லை என்பது தெரிந்ததும், அந்த நாள் இரவிலேயே வீடுபுகுந்து திருடிச்செல்லும் சம்பவங்கள் பெரம்பலூர் நகரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் தினமும் நடந்து வருகின்றன. மாநகரப்பகுதிகளில் அவ்வப்போது நடக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பெரம்பலூரில் பட்டப்பகலிலேயே நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஊரக போலீஸ் நிலையம்
மேலும் நான்கு ரோடு சந்திப்பு, வெங்கடேசபுரம், புதிய பஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளையும் திருடர்கள் விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டம் வழிப்பறி திருடர்கள், கொள்ளையர்களின் புகலிடமாக மாறிவருகிறது. போலீஸ் பற்றாக்குறையால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் திணறி வருவதால், பொதுமக்கள் போலீசார் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
எனவே பெரம்பலூரில் தற்போது இயங்கிவரும் டவுன் போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரித்து துறைமங்கலத்தில் ஒரு ஊரக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் தனியாக திருட்டு- வழிப்பறி, கொள்ளைக்குற்றங்களை விசாரிப்பதற்கென்று தனி போலீஸ் பிரிவை நிரந்தரமாக, உடனடியாக அமைத்திட போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் என்று பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதல் போலீசார்
இதேபோல் டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட எண்ணிக்கையிலேயே போலீசார் உள்ளனர். பெரம்பலூரில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பள்ளி-கல்லூரி படிப்பு, வேலைவாய்ப்பிற்காக பெரம்பலூரில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லாமல், போலீசார் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.
எனவே வழிப்பறிக்கொள்ளையர்கள் எவ்வித பதற்றமும் இன்றி மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். ஆகவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பெரம்பலூரில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சார்லி என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்லும் போலீஸ் குழுவினர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அதுபோன்ற போலீஸ் குழுவினர் பணியில் இல்லை. ஆகவே பெரம்பலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை தமிழக அரசு நியமித்து பொதுமக்களை பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story