மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புதுமாப்பிள்ளை திடீர் சாவு


மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புதுமாப்பிள்ளை திடீர் சாவு
x
தினத்தந்தி 12 May 2021 1:50 AM IST (Updated: 12 May 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார்.

மீன்சுருட்டி:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 58). இவருடைய மகன் நிஷாந்த்(30). பட்டதாரியான இவர் சென்னை ஒரக்கடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், சென்னையில் உள்ள பள்ளிகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வருகிற 17-ந்தேதி திருமணம் செய்ய முடிவு செய்து, உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த் வேலை பார்த்த நிறுவனத்தில், அவருக்கு விடுமுறை அளித்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந்தேதி சென்னையில் இருந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பெண்  வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட நிஷாந்த் உணவு செரிக்காமல் வாந்தி எடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், நிஷாந்த் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து, நிஷாந்தின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story