கார் மீது லாரி மோதல்; அரசு பெண் டாக்டர் உயிர் தப்பினார்
கார் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பெண் டாக்டர் பரிதாபமாக உயிர் தப்பினார்.
விக்கிரமங்கலம்:
திருச்சி புத்தூர் வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வினா பிரியங்கா(வயது 33). இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் தங்கியிருந்து, அங்கிருந்து தினமும் ஸ்ரீபுரந்தானுக்கு பணிக்கு வந்துவிட்டு மீண்டும் கும்பகோணம் செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று காலை கும்பகோணத்தில் இருந்து ஸ்ரீபுரந்தான் நோக்கி தனது காரில் வந்தார். காரைக்குறிச்சிக்கும் -ஸ்ரீபுரந்தான் பகுதிக்கும் இடையே உள்ள மைனர் பாலம் என்று அழைக்கப்படும் பாலத்திற்கு அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. டாக்டர் வினா பிரியங்கா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், சாலை அமைப்பதற்கு தேவையான கிராவல் மண் விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் பகுதியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக கூறி நேற்று முன்தினம் காரைக்குறிச்சி பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story