பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்


பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்
x
தினத்தந்தி 12 May 2021 2:38 AM IST (Updated: 12 May 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்.

நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் கோவிந்தராஜன் (வயது 34). இவர் கடந்த 2006-ம் ஆண்டு சொத்து தகராறில் உறவினர் ஒருவரை கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், நாகர்கோவில் கோர்ட்டு 2019-ம் ஆண்டு கோவிந்தராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தோட்ட வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 5-ந்தேதி சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கோவிந்தராஜன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் நைசாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறை அதிகாரி சார்பில் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜனை தேடி வந்தனர். 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மலை அடிவாரத்தில் கோவிந்தராஜன் பதுங்கி இருந்து சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் சிறைக்காவலர்கள் தக்கலை பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அவர்கள் கோவிந்தராஜனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Next Story