திருச்சி மேற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வினியோகம்


திருச்சி மேற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வினியோகம்
x
தினத்தந்தி 12 May 2021 2:48 AM IST (Updated: 12 May 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மேற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் நேற்று வினியோகிக்கப்பட்டன.


திருச்சி, 
திருச்சி மேற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் நேற்று வினியோகிக்கப்பட்டன. அவர்களுக்கு, அரசு அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்

திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களில் வட்ட வழங்கல்  அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 1,224 ரேஷன் கடைகள் மூலம் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகிறார்கள். அவர்களில் அரிசி கார்டுதாரர்கள் மட்டும் 8 லட்சத்து 6 ஆயிரத்து 198 உள்ளது. மேலும் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்காக ஏராளமானவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்டன.

வினியோகிக்கும் பணி

அதன்படி, திருச்சி மேற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 475 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் தயாராகி வந்தன. அவர்கள், ஏற்கனவே, எந்தெந்த ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற வேண்டும் என கணினியில் பதிவேற்றம் செய்து ஒதுக்கீடும் செயப்பட்டு விட்டன. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு விட்டது. இந்த நிலையில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகிக்கும் பணி நேற்று வட்ட வழங்கல் அலுவலகத்தில் தனித்தாசில்தார் சண்முக ராஜசேகரன் முன்னிலையில் நடந்தது. அலுவலக பணியாளர்களால், சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வந்தவர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.

ரூ.2 ஆயிரம் கிடைக்குமா?

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பெற்றவர்கள் பலர், தங்களுக்கும் அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கிடைக்குமா? என்ற சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு, கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடிக்க வேண்டும் என்றும், புதிய ஸ்மார்ட் கார்டுகள் தொடர்ந்து அவ்வப்போது விண்ணப்பித்தவர்களுக்கு வினியோகிக்கும் பணி நடக்கும் என்றும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெறும் எண்ணத்தில் ரேஷன் கார்டுகளை தொலைத்தவர்கள், முகவரி மாறியவர்கள் என பலர் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் திரும்பி சென்றனர்.

Next Story