திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி- கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தகவல்


திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி- கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 12 May 2021 2:48 AM IST (Updated: 12 May 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, திருச்சி மாவட்டத்தில் மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

திருச்சி,

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, திருச்சி மாவட்டத்தில் மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூடுதல் தலைமைச்செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பணீந்திர ரெட்டி தெரிவித்ததாவது:-

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை அளிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் (கோவிட் கேர்) சேதுராபட்டி அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகம், பிஷப் ஹீபர் கல்லூரி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருச்சி மண்டல ரெயில்வே பயிற்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு சட்டக்கல்லூரி, திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை, பாரத மிகுமின் நிலைய பயிற்சி நிறுவனம் (பி.எச்.இ.எல்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனமான அப்பலோ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக 2 கல்லூரிகள்

மேலும், கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு குறிஞ்சி பொறியியல் கல்லூரி மற்றும் குமுளூர் வோளாண் பல்கலைக்கழகத்திலும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளையும், தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நேரடியாக ஆய்வு

பின்னர் பெரிய மிளகுபாறையில் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கும் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதையும், கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள உறையூர் வாரச்சந்தையையும் நேரடியாக பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாநகர துணை கமிஷனர் பவன்குமார்ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் குடும்பநலம்) டாக்டர் லெட்சுமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் லலிதா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story