சேலத்தில் 2-வது நாளாக முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின மதியம் வரை திறந்திருந்த காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது
சேலத்தில் 2-வது நாள் முழுஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. மதியம் வரை திறந்திருந்த காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
சேலத்தில் 2-வது நாள் முழுஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. மதியம் வரை திறந்திருந்த காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-ம் அலை மிக தீவிரமாக உள்ளது. நோய் தொற்றால் ஏராளமானோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் சேலத்தில் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கையொட்டி நேற்று 2-வது நாளாக வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின. சேலத்தில் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட்டன. காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வெறிச்சோடின
பழைய பஸ் நிலைய காய்கறி மார்க்கெட், ஆனந்தா ஆற்றோர தினசரி காய்கறி சந்தை ஆகியவை செயல்பட்டன. அதில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தன. மதியம் 12 மணிக்கு மேல் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஓமலூர் ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோன்று ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. காலையில் இருந்து மதியம் 12 மணி வரை காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க சாலையில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் மக்கள் வந்து சென்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்து இல்லாததால் கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
அபராதம்
பஸ்கள் ஓடாததால் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது. மாநகராட்சி பகுதிகளில் தடையை மீறி மதியம் 12 மணிக்கு மேல் செயல்பட்ட ஒரு சில கடை உரிமையாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து கடையை மூட வைத்தனர். இதே போன்று முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்கள் பலரை எச்சரித்தனர். கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கையொட்டி சேலம் மாநகரில் 16 இடங்களிலும், மாவட்டத்தில் 20 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் போலீசார் 2-வது நாளாக தீவிர வாகன சோதனை நடத்தினர். தடையை மீறி மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story