திருச்சி வக்கீல் கொலையில் 6 பேர் கைது


திருச்சி வக்கீல் கொலையில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 2:53 AM IST (Updated: 12 May 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வக்கீல் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்சி,
திருச்சி வக்கீல் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்சி வக்கீல் கொலை

திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவை சேர்ந்தவர் வக்கீல் கோபி கண்ணன் (வயது 35). இவர் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் வீட்டின் அருகே தனது 5 வயது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது.
இந்த கொலை தொடர்பாக கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்த பிரிஜேஸ் பிரசாந்த் (22), கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்த சுரேஷ் (20), திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பை சேர்ந்த உதயகுமார் (23), திருவானைக்காவல் பாரதி தெருவை ேசர்ந்த நல்லதம்பி (21), திருவானைக்காவல் தெப்பக்குள தெருவை சேர்ந்த அருண் (20), திருவானைக்காவல் மருதமுத்து தோப்பை சேர்ந்த சித்திக் (19) ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

காரணம் என்ன?

வக்கீல் கோபிகண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோபி கண்ணன் பீமநகர் பகுதிக்கு குடி வந்து 2 வருடங்கள்தான் ஆகிறது. அதற்கு முன்பாக அவர் பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது கோபி கண்ணனுக்கு அதே பகுதியில் வசித்து வந்த ஹேமந்த் குமார் (30) என்பவருடன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 21-1-2018 அன்று ஹேமந்த் குமார் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வக்கீல் கோபி கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான ஜாகீர்உசேன், ஆனந்த், பிச்சைமுத்து, ரமேஷ், சுரேஷ், கிருபாகரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

பழிக்குப்பழி

இந்த நிலையில்தான் வக்கீல் கோபி கண்ணன் கீழப்புதூரில் இருந்தால் தனக்கு தனது உயிருக்கு ஆபத்து எனக் கருதி பீமநகர் பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். அதே நேரத்தில் ஹேமந்த் குமார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் கோவைக்கு இடம்பெயர்ந்தனர். 

ஆனால் ஹேமந்த் குமாரின் தம்பியான பிரிஜேஸ் பிரசாந்த் தனது அண்ணன் கொலைக்கு காரணமான வக்கீல் கோபி கண்ணனை பழிக்குப்பழி தீர்க்க வேண்டும் என கங்கணம் கட்டினார். கோவையில் இருந்தபடியே அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். 

கோர்ட்டில் ஆஜர்

இது தொடர்பாக தனது நண்பர்களான உதயகுமார், சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கூலி படையினரின் உதவியுடன் கோபிகண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரிஜேஸ் பிரசாந்த் உள்பட 6 பேரும் நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Next Story