சேலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
சேலத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சேலம்:
சேலத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சூறாவளி காற்றுடன் மழை
கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர். கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று வெயிலின் அளவு 102.4 டிகிரியாக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் சேலத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அப்போது பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
மாநகரில் அஸ்தம்பட்டி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம், அழகாபுரம், மெய்யனூர், பெரமனூர் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.
மழையினால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஆங்காங்கே உள்ள தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story