2-வது நாளாக முழு ஊரடங்கு: தென்காசியில் கடைகள் அடைப்பு
ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் நேற்று 2-வது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடின.
தென்காசி:
கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. நேற்றும் அதேபோல் தென்காசியில் மதியம் 12 மணி வரை இந்த கடைகள் செயல்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உணவகங்களில் பொதுமக்களுக்கு பார்சல்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்கள் அதிகமாக கூடும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, மேல ஆவணி மூல வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மேம்பாலம் ஆகிய அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோக்கள், கார்கள் எதுவும் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டன. மருந்து கடைகள் திறந்து இருந்தன.
போலீசார் ஆங்காங்கே நின்று சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது உரிய காரணங்கள் கூறாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர். தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மினி வேனில் ஒலிபெருக்கி அமைத்து அதில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய ஒலிநாடா மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இந்த வாகனம் தென்காசி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story