ஈரோடு மாவட்டத்தை ஆட்டி படைக்கும் தொற்று பரவல்: புதிய உச்சமாக ஒரே நாளில் 925 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 4 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தை ஆட்டி படைக்கும் தொற்று பரவல்: புதிய உச்சமாக ஒரே நாளில் 925 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 12 May 2021 4:16 AM IST (Updated: 12 May 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரே நாளில் 925 பேர் பாதிக்கப்பட்டார்கள். மேலும், பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரே நாளில் 925 பேர் பாதிக்கப்பட்டார்கள். மேலும், பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
புதிய உச்சம்
கொரோனா தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்ததை காணமுடிந்தது. தற்போது தமிழகத்திலும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், நோய் பரவுவதை தடுப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்றாக மாறி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை ஈரோடு மாவட்டம் எட்டியது. ஒரே நாளில் 925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களை அச்சமடைய செய்துள்ளது.
547 பேர் குணமடைந்தனர்
கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களைப்போல ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. எனவே மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 ஆயிரத்து 384 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 23 ஆயிரத்து 786 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 547 பேர் குணமடைந்தனர்.
4 பேர் பலி
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது வரை 4 ஆயிரத்து 421 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆணும், கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 45 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந் தேதி இறந்தார்கள். இதேபோல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் 9-ந் தேதியும், கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 79 வயது முதியவர் நேற்று முன்தினமும் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 177 ஆக உயர்ந்தது.
துணை இயக்குனர்
இதற்கிடையே ஈரோடு திண்டலில் உள்ள மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மருத்துவ விடுப்பில் உள்ள துணை இயக்குனர் சவுண்டம்மாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தன்னை தனிமை படுத்திக்கொண்டார். தற்போது துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய உதவி திட்ட மேலாளர் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் துணை இயக்குனர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story