கொரோனா தடுப்பூசி போட ஆர்வமுடன் வரும் பொதுமக்கள் மிகக்குறைந்த அளவிலேயே மருந்து இருப்பதால் ஏமாற்றம்


கொரோனா தடுப்பூசி போட ஆர்வமுடன் வரும் பொதுமக்கள் மிகக்குறைந்த அளவிலேயே மருந்து இருப்பதால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 11 May 2021 10:46 PM GMT (Updated: 11 May 2021 10:46 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வமாக வந்தாலும் மிகக்குறைந்த அளவிலேயே மருந்து இருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வமாக வந்தாலும் மிகக்குறைந்த அளவிலேயே மருந்து இருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைகளில் இயங்குகிறது. பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு
பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடுவதற்காக காலை 6 மணிக்கே வந்து பலரும் வரிசையில் காத்து இருக்கிறார்கள். இங்கு தினசரி 100 பேருக்கு மட்டுமே ஊசி போட முடியும் என்ற அளவுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கிறது. எனவே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஊசி போடப்படுகிறது.
இங்கு கொரோனா மையத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் டாக்டர் பாவேந்தன் ஊசி போட வரும் அனைவரிடமும் பரிவுடன் பேசி, இருக்கும் ஊழியர்களை வைத்து முழுமையாக ஊசிபோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்டவர்கள் தினசரி இங்கு ஊசி போட வருகிறார்கள். ஆனால் கூடுதலாக மருந்து வினியோகம் இல்லாததால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
அச்சம்
தொடக்கத்தில் தடுப்பூசி மீது அதிக ஆர்வம் இல்லாமல் பொதுமக்கள் இருந்தனர். ஆனால், தற்போது 2-ம் அலையின் வீரியம் அனைவரையும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை என்ற செய்திகள் இன்னும் அதிக பயத்தையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. எனவே தடுப்பூசியையாவது போட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு பொதுமக்கள் வந்து உள்ளனர். மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு உரிய உத்தரவு வரவில்லை. தற்போதைய நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூட தடுப்பூசி செலுத்த தேவையான மருந்து இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
அரசு மருந்து வினியோகம் செய்யாமல் இருப்பதால் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் ஊசி போட வருபவர்களுக்கு உரிய பதில் அளிக்க திணறி வருகிறார்கள். மிகவும் சிரமமான இந்த நேரத்தில் தடுப்பூசிகள் அதிக அளவில் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

Next Story