தென்காசியில் இன்று முதல் காய்கறி சந்தையாக மாறும் பஸ் நிலையங்கள்


தென்காசியில் இன்று முதல் காய்கறி சந்தையாக மாறும் பஸ் நிலையங்கள்
x
தினத்தந்தி 12 May 2021 4:17 AM IST (Updated: 12 May 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் இன்று (புதன்கிழமை) முதல் காய்கறி சந்தையாக மாறும் பஸ் நிலையங்களை கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

தென்காசி:
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தற்போது முழுஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. கடந்த முறை ஊரடங்கு சமயத்தில் தினசரி சந்தையில் இருந்து காய்கறி கடைகள் தென்காசி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தன. அதேபோல் தற்போது மொத்த விற்பனை கடைகள் தினசரி சந்தையிலேயே செயல்படவும், சில்லறை விற்பனை கடைகள் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இயங்கவும் நகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் கூறும்போது, இன்று (புதன்கிழமை) முதல் இங்கு கடைகள் இயங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வியாபாரிகளும் முழுமையாக இங்கு வருவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து வியாபாரிகளும் முழு அளவில் இங்கு கடைகளை அமைத்து விற்பனை நடைபெறும் என்று தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் வருவோருக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். பெண்கள் உள்நோயாளிகள் பிரிவில் கூடுதலாக 50 படுக்கை வசதிகள் அமைப்பதற்கு நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டு, விரைவில் அந்த பணிகளை முடிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தென்காசி நகராட்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சமீரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்காணித்து ஆய்வு செய்து முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் பாரி ஜான், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story