ஓடையில் மீன்பிடித்த கிராம மக்கள்
நிலக்கோட்டை அருகே கிராம மக்கள் ஓடையில் மீன்களை பிடித்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிறுமலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள சிறுமலை நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது. அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து புதுக்குளம், புலமாசி கண்மாய் வழியாக ரெட்டிக்குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கண்மாயில் இருந்து குளத்துக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் மீன்கள் துள்ளிக்குதித்தன. இதனைக்கண்ட கவுண்டம்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட கிராம மக்கள், வலைகள் மூலம் ஓடையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வலைகளில் அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கின. அவற்றை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். சிலர், மீன்களை விற்பனை செய்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு கோடைக்காலத்தில் ரெட்டிக்குளத்துக்கு இவ்வளவு தண்ணீர் வருகிறது. தற்போது அயிரை மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். இதற்கிடையே கிராம மக்கள் மீன்பிடித்ததை கரையோரத்தில் நின்றபடி ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story