பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய திண்டுக்கல் ரெயில் நிலையம்


பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய திண்டுக்கல் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 12 May 2021 7:28 PM IST (Updated: 12 May 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் ரெயில் சேவை குறைக்கப்பட்டதால் திண்டுக்கல் ரெயில் நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் ரெயில் நிலையம்
தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாக திண்டுக்கல் திகழ்கிறது. இதனால் வாகன போக்குவரத்து மட்டுமின்றி ரெயில்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. 

திண்டுக்கல் வழியாக சென்னை, திருவனந்தபுரம், மைசூர், பெங்களூரு, மும்பை உள்பட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

 அந்த வகையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 86 ரெயில்கள் நின்று செல்கின்றன.


தினமும் சராசரியாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். 

அதிலும் விடுமுறை நாட்களில் கூட்டம் இருமடங்காக அதிகரித்து விடும்.

 அதுபோன்ற நேரத்தில் ரெயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும். 

இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். 

இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

ரெயில்கள் குறைப்பு 
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. 

அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. 

அதன்மூலம் திண்டுக்கல் ரெயில் நிலையமும் பரபரப்பாக இயங்கியது.

 இதற்கிடையே கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

எனவே, பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

அதன்படி திண்டுக்கல் வழியாக 17 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

 இதில் வாராந்திர ரெயில்களும் உள்ளன. 

இந்த ரெயில்களிலும், கொரோனா அச்சம் காரணமாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே செல்கின்றனர். 

இதனால் அனைத்து ரெயில்களிலும் பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ளன. 

அதிலும் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

வெறிச்சோடியது 
இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய திண்டுக்கல் ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

 மேலும் பயணிகள் வருகை குறைந்ததால் ரெயில் நிலையத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்வோரும் வருமானமின்றி தவிக்கின்றனர்.

 கொரோனா குறைந்து ரெயில்களில் முன்புபோன்று மக்கள் அதிக அளவில் பயணிக்கும் நாட்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story