நீலகிரியில் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு


நீலகிரியில் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு
x

நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது.

ஊட்டி

நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது.

தேயிலை சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தோட்டங்களில் பச்சை தேயிலையை பறித்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், தனியார் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். 

அதற்கு மாதாந்திர சராசரி விலை அடிப்படையில் விலை கிடைக்கிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகின. 

இதனால் தேயிலை மகசூல் குறைந்தது. கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. 

வரத்து அதிகரிப்பு 

இதனால் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து இருக்கிறது. நீலகிரியில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. 

மஞ்சூர், இத்தலார், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினமும் 15 ஆயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

பின்னர் தேயிலை உலர வைக்கப்பட்டு தேயிலைத்தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உற்பத்தி நடந்து வருகின்றது. 

தற்போது பச்சை தேயிலை வரத்து கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது அவ்வப்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. தேயிலை தேக்கம் அடையும் நிலை உள்ளது.

கொள்முதல் செய்ய வேண்டும் 

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.19.85 விலை கிடைத்தது. நடப்பு மாதம் ரூ.18.63 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதத்தை விட ரூ.1.22 விலை குறைந்தது. 

இதற்கிடையே பச்சை தேயிலையை கொள்முதல் செய்யாமல் நிறுத்துவதால் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படும். எனவே, பச்சை தேயிலையை தொடர்ந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story